Talk:People's Liberation Organisation of Tamil Eelam
From Wikipedia, the free encyclopedia
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.
“மாவட்ட சபைத்தீர்வை தமிழர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்”
நேர்காணல்: அ.சுமணன்
இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள மாவட்டசபைத் தீர்வை தமிழர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரது செவ்வியின் விபரம் வருமாறு:
கேள்வி: த.வி.கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி ஆகியன இணைந்த உங்களது இப்போதைய கூட்டணியின் முக்கியமான எதிர்கால நோக்கம் என்ன?
பதில்: எங்களது கூட்டமைப்பு பற்றி இப்போதுதான் பத்திரிகைகளில், அறிக்கைகளில் வெளியிடப்பட்டிருந்தாலும் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக பல விடயங்களில் நாங்கள் இணைந்தே செயற்பட்டு வருகிறோம். முக்கியமாக வெளிநாட்டு தூதுவர்களைச் சந்திப்பது அரசை அல்லது ஜனாதிபதியை சந்தித்து தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். எதிர்கால நோக்கம் எனும்போது தமிழ் மக்களது பிரச்சினைக்கு இணைந்த வடகிழக்கிற்குள் சமஷ்டி அரசியலமைப்பின் அடிப்படையில் ஒரு தீர்வைக் காண்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வது.
கேள்வி: அடிப்படையில் வேறுபட்ட தீர்வு முறைகளைக் கொண்டுள்ள நீங்கள் எவ்வாறு ஒன்றிணைகிறீர்கள். குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி இந்திய முறைத்தீர்வு பற்றி நீங்கள் சமஷ்டி பற்றி கூறுகிறீர்கள் இதனைப்பற்றி?
பதில்: எங்களுக்கு அடிப்படையில் முரண்பாடுகள் உள்ளதாகத் தெரியவில்லை. எல்லாமே சமஷ்டித் தீர்வுகளாகவே அமைந்திருக்கின்றன. அதனால் இந்த விடயத்தில் பிரச்சினைகள் உள்ளதாகக் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரை தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதே நோக்கம். அதேபோல் இந்தக் கூட்டணியில் இன்னமும் பலர், இணைய முடியும். இணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. புலிகள் தவிர்ந்த எந்த ஒரு தமிழ்க் கட்சிக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. புலிகள் மாத்திரம் தனிநாட்டுக் கோரிக்கையை நோக்கமாகக் கொண்டு தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தை தொடர்கிறார்கள். எது எப்படியிருந்தாலும் தனிநாட்டுக் கோரிக்கையில் தம்பிக்கு(பிரபாகரனுக்கு) இருக்கின்ற பற்றுறுதியை மாற்ற முடியாது. என்னைப் பொறுத்தமட்டில் தனிநாட்டுக் கோரிக்கையை பிரபாகரன் கைவிடமாட்டார்.
கேள்வி: அப்படியானால் ஈ.பி.டி.பியும் உங்களுடன் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புள்ளதா? அத்தோடு வேறு ஏதாவது கட்சிகளும் இணையுமா?
பதில்: நிச்சயமாக நான் முன்பு சொன்னதுபோல் தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்ற விடயத்தில் உடன்பாடுள்ளவர்கள் இணைவதற்கான வாய்ப்புள்ளது. அடிப்படையில் ஒன்றாகச் சிந்திக்கின்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். கேள்வி: எதிர்காலத்தில் தேர்தல் வரும் பட்சத்தில் இதே கூட்டணியில் போட்டியிடுவீர்களா? அதற்கான சின்னம் பெயர் குறித்து ஏதாவது முடிவு எடுத்துள்ளீர்களா?
பதில்: எங்களுடைய இந்தக் கூட்டமைப்பானது தேர்தலை நோக்கமாகக் கொண்டு கூட்டப்பட்ட கூட்டு அல்ல. தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தனித்தனிக் கட்சிகளாக எடுப்பதைக் காட்டிலும் ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதன் மூலம் அது ஒரு பலமான குரலாக இருக்கும் என்ற காரணத்திற்காகவே நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகிறோம். எங்கள் கட்சியைப் பொறுத்தமட்டில் நாடாளுமன்றத்தில் இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன? மக்களுடைய அன்றாட அவலங்களைக் களைவதற்கு எம்மாலான முழுமையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். சுனாமி; பேரலை அழிவின் நேரத்தில் கூட மேற்கு நாடுகளில் வாழுகின்ற எமது தோழர்கள் சேகரித்து அனுப்பிய பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை மக்கள் மத்தியிலே பகிர்ந்தளித்திருந்தோம். பிரத்தியேகமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே சுனாமிப் பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாகவே எமது அங்கத்தவர்கள் அங்கு மக்களைப் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு அவர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வேலைகளையும் ஆரம்பித்தார்கள். அத்துடன் அண்மையில் யுத்த சூழ்நிலையால் இடம்பெயர்ந்த மக்களுக்கு வவுனியா மாவட்டத்திலிருந்து சேகரித்த உலர் உணவுப் பொருட்களை விநியோகித்திருக்கிறார்கள். எமது சக்திக்குட்பட்ட வரையில் நாடாளுமன்றத்தில் இல்லாவிட்டாலும் கூட மக்களின் அன்றாட அவலங்களைப் போக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் நாடாளுமன்ற அங்கத்துவம் என்பது நாம் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பகுதிகளின் அபிவிருத்தி வேலைகளையும் யுத்தத்தினால் அழிவுற்ற பிரதேசங்களை மீளக்கட்டி எழுப்புவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்றே நம்புகிறோம். ஏனெனில் கடந்த காலங்களில் நாம் பிரதிநிதித்துவப்படுத்திய பகுதிகளில் மிகவும் சிறப்பாக அபிவிருத்திப் பணிகளைச் செய்திருக்கிறோம் என்றே நம்புகிறோம். அடுத்த தேர்தல் ஒன்று வருகின்ற பட்சத்தில் இந்தக் கூட்டமைப்பு சார்பிலேயே தேர்தலில் பங்குபற்றி அதில் கிடைக்கக் கூடிய பிரதிநிதித்துவம் மூலம் அரசியல் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
கேள்வி: இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் ஸ்ரீ.ல.சு.கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ளன. அது முடிந்துவிட்ட நிலையில் உங்களது கூட்டணியால் ஏதாவது செய்ய முடியுமா? முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு யோசனைகள் சம்பந்தமாக உங்களது கருத்து என்ன?
பதில்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு யோசனைகள் எந்த வகையிலும் தமிழ் பேசும் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாது. கடந்த 50வருட காலமாக ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு காண முடியாது என்பதை தமிழ் பேசும் மக்கள் மாத்திரமல்ல சர்வதேச சமூகமும் நன்கு உணர்ந்து ஒரு சமஷ்டி அமைப்பின் கீழ்தான் தீர்வுகாண முடியும் என்பதை வலியுறுத்தி வந்துள்ளனர். ஸ்ரீ.ல.சு.கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் 13ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபை அதிகாரங்களை விட எத்தனையோ படிகள் கீழ் நோக்கிச் சென்றுள்ளன. இலங்கையைப் பொறுத்தமட்டில் தெற்கிலே வாழுகின்ற பெரும்பான்மைச் சிங்களவர்கள் கூட சமஷ்டி முறை மூலம் ஒரு மாநில சுயாட்சி மூலம் தான் நிரந்தரத் தீர்வொன்றைக் காணமுடியும் என்று கூறியிருக்கிறார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.வுக்கு 49வீதமான மக்கள் சமஷ்டிக் கோரிக்கையை ஆதரித்தே வாக்களித்தார்கள். ஐ.தே.க வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி அமைப்பு பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மகாநாட்டில் கூட சமஷ்டி அமைப்புத்தான் தீர்வாக இருக்க முடியும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆகவே இந்த நாட்டில் வாழுகின்ற பெரும்பான்மைச் சிங்கள மக்களும் தமிழ் பேசும் மக்களும் சமஷ்டி அமைப்பின் மூலம் தான் ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தலாம் என்பதை மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
கேள்வி: அப்படியானால் இப்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளிலுள்ள மாவட்டமுறை எவ்வாறு சாத்தியப்படும்?
பதில்: 1980 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜயவர்த்தனவால் கொண்டு வரப்பட்ட இந்த மாவட்ட சபை முறைமை முழுமையாகவே எந்தவிதத் தீர்வையும் கொடுக்க முடியாமல் செயலிழந்து போனது. மீண்டும் 83 ஆம் ஆண்டு கலவரத்தின் பின் கொழும்பில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜயவர்த்தனவால் இதே மாவட்ட சபை பிரேரணை முன்வைக்கப்பட்டது. அன்று தமிழ்த் தரப்பால் அது முழுமையாக நிராகரிக்கப்பட்டது. மீண்டும் 1985 ஆம் ஆண்டு திம்பு பேச்சு வார்த்தைகளில் ஸ்ரீலங்கா அரசால் அதே பிரேரணை முன்வைக்கப்பட்டு தமிழ்த் தரப்பு முழுமையாக நிராகரித்ததுடன் தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதென்றால் திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் காண முடியும் என்பதைத் தெளிவாகக் கூறி 4 அம்ச திம்புக் கோட்பாட்டை முன்வைத்தது. இன்று தமிழ் மக்கள் மாவட்ட சபைகள் என்ற தீர்வை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகவே சுதந்திரக் கட்சி தனது இந்த பரிந்துரைகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.
கேள்வி: வடக்கு கிழக்கு இணைவு தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்: 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கையெழுத்திட்டபோது வடக்கு கிழக்கு இணைப்பு தற்காலிகமாக இருந்தாலும் அதில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனச் சொல்லப்பட்டிருந்தாலும் அந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என்று ஜே.ஆர்.ஜயவர்த்தனா தனக்கு உறுதியளித்துள்ளதாக இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி அவர்கள் எங்களுக்கு கூறி இருந்தார். அது சம்பந்தமாக எமது மறைந்த தலைவர் பத்திரிகைகளுக்கு விடுத்த செய்தியில் ஒரு விடயத்தை தெளிவாகக் கூறியிருந்தார். தனி மனிதர்களின் உறுதி மொழிகள் ஒரு இனத் தீர்வு விடயத்தில் எவ்வித பலனும் அளிக்கப் போவதில்லை. அவை ஒப்பந்தத்தில் பிரதிபலிக்க வேண்டும். தனி மனிதர்கள் சாகாவரம் பெற்றவர்களல்லர். அது மாத்திரமல்ல அதிகாரத்தில் தொடர்ந்தும் ஒரு மனிதர் இருக்க முடியாது. அத்துடன் வடகிழக்கு இணைப்போ, பிரிப்போ என்பது இங்கு கேள்வி அல்ல. எப்போதும் கிழக்கு என்பது தமிழ் பேசும் மக்களுடைய தாயகம் என்பதுதான் உண்மை.
கேள்வி: நீங்கள் சொல்லும் சமஷ்டி தந்தை செல்வநாயகம் காலத்திலிருந்து இருக்கிறது. முன்வைக்கப்படுகிறது. இதனை சிங்களத் தலைமைகளிடமிருந்து உங்களால் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா?
பதில்: அவ நம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட முடியாது. தந்தை செல்வநாயகம் காலத்தில் முதல் சமஷ்டி முன்வைக்கப்பட்டிருந்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து முடிந்து விட்டன. அதனால் எங்களது சமஷ்டித் தீர்வு தமிழ் மக்களுக்கு சுதந்திரமான வாழ்வுக்கு உகந்த வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். நாங்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வு சமஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை திம்பு முதல் வெளிப்படுத்தி வருகிறோம். எனவே தமிழ் மக்களுடைய அபிலாசைகளை நிவர்த்தி செய்து தருவதாக தீர்வு அமைய வேண்டும். சிங்களத் தலைமைகள் சமஷ்டி அமைப்புக்கு குறைவான அதிகாரப் பரவலாக்கம் தான் தீர்வாக அமையலாம் என்று கருதுவார்களானால் இந்த நாட்டில் நிரந்தர அமைதி ஏற்படுவது கடினமாகத்தான் இருக்கும். இவ்வளவு அழிவுகளின் பின்பும் ஒரு சரியான தீர்வுத்திட்டத்துக்கு குறைவான ஒரு தீர்வை தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதை சிங்களத் தலைமைகள் உணர வேண்டும். அப்படியானதொரு தீர்வை அவர்கள் முன்வைக்காத பட்சத்தில் இந்நாட்டில் அமைதி காண்பது மிகவும் கடினமாகவே இருக்கும்.
கேள்வி: சிங்களத் தலைமைகள் உங்களை கூட்டுச் சேர்த்துக் கொண்டு தமிழ்த் தேசியவாதப் போராட்டத்தினை பின்னடையச் செய்வதில் முனைப்புக் காட்டினால் உங்களது நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
பதில்: கூட்டுச் சேர்ந்திருக்கின்ற மூன்று கட்சிகளும் எந்த விதத்திலும் சிங்களத் தலைமைகளின் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டாது என்பது திண்ணம். நாங்கள் 3 கட்சிகளுமாகச் சேர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற ஒற்றையாட்சிக்குள் மாவட்ட சபை என்ற தீர்வு ஆலோசனைகளை முற்று முழுதாக நிராகரித்து பத்திரிகை அறிக்கைகளை விடுத்திருக்கின்றோம். அது மாத்திரமல்ல இந்த மூன்று கட்சிகளும் ஒரு பாரம்பரியம் தமிழ் மக்களுடைய போராட்டத்தில் சாத்வீக முறையையோ ஆயுதப் போராட்டத்திலோ அர்ப்பணித்த விடயங்கள் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு கட்சியும் வௌ;வேறு அணுகுமுறைகளைக் கொண்டிருந்தாலும் இலக்கு ஒன்று தான் தமிழ் பேசும் மக்களுடைய அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பது தான். அந்த இலக்கிலிருந்து எவ்வளவு இடர்கள் வந்தாலும் நாம் பின்வாங்க மாட்டோம்.
கேள்வி: தற்போது கடத்தல், கொள்ளைகள், கப்பம் பெறல் போன்ற பிரச்சினைகளால் தமிழ் மக்கள் மிக மோசமான நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றிலிருந்து அவர்களை மீட்பதற்காக உங்களது கூட்டணி எவ்வாறான வேலைத் திட்டங்களைச் செய்யவுள்ளது?
பதில்: இன்று மாத்திரமல்ல. காலத்துக்குக் காலம் தமிழ் மக்கள் இப்படிப்பட்ட நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தே வந்திருக்கிறார்கள். இன்று இந்தக் கடத்தல்களும் காணாமல் போவதும் அதிகரித்து வந்திருப்பதைனைப் பார்க்கின்றோம். இவை சம்பந்தமாக நாம் கூட்டாகவும் தனித்தனியாகவும் பல இடங்களில் அழுத்தங்கள் கொடுத்து வருகிறோம். இந்தக் கடத்தல்கள், காணாமல் போதல், கொலைகள், கப்பம் பெறல் இவற்றிற்கு ஆரம்ப கர்த்தாக்களாக விடுதலைப் புலிகளே இருந்து வந்திருக்கிறார்கள். எங்களுடைய பல மூத்த உறுப்பினர்கள் புலிகளினால் கடத்தப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்போதுள்ள யுத்தநிறுத்த காலத்திலும் கூட பல மூத்த உறுப்பினர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டிருக்கிறார்கள். எங்களுடைய உறுப்பினர்களும் ஆதரவாளர்களுமாக 80 பேருக்கும் அதிகமாக தற்போதைய யுத்தநிறுத்த கால கட்டத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எங்களுடைய மத்திய குழு உறுப்பினரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான சின்னத்தம்பி கணேசலிங்கம் அல்லது பாரூக் புலிகளால் வவுனியாவிலிருந்து கடத்தப்பட்டு இன்னும் அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். எங்களுடைய வவுனியா அரசியல் பரிவுப் பொறுப்பாளர் திருப்பதி மாஸ்ரர் கொல்லப்பட்டிருக்கிறார். இப்படி பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொலைகள் நடந்தபோது சர்வதேச சமூகமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இவற்றைத் தட்டிக்கேட்டு தடுப்பதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இன்றும் இந்தக் கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இன்று ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஏன்? எதற்காக? யாரால் கொல்லப்படுகிறார்கள்? அல்லது கடத்தப்படுகிறார்கள் என்று தெரியாமலே நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டியது அரசாங்கத்தினுடையது மாத்திரமல்ல சர்வதேசத்தினுடைய பொறுப்புமாகும்.